மிக்கி மவுஸ் 85

‘ஓவியம் வரையத் தேவையான கற்பனை வளம் உங்களுக்கு இல்லை’ என்று பலரால் கேலி பேசித் துரத்தப்பட்ட வால்ட் டிஸ்னி உருவாக்கிய ஒரு கார்ட்டூன் கதாபாத்திரம், மிக்கி மவுஸ். இன்றுவரை உலக சுட்டிகளின் நம்பர் 1 ஹீரோவாக இருக்கும் மிக்கி மவுஸ், நவம்பர் 18-ம் தேதி தனது 85-வது பிறந்தநாளைக் கொண்டாடியது.

வால்ட் டிஸ்னி, முதலில் ‘ஆஸ்வால்ட் த லக்கி ரேபிட்’ என்ற கதாபாத்திரத்தை உருவாக்கினார். அதன் வருமானத்தில் சொந்தமாக ஒரு ஸ்டூடியோ உருவாக்க வேண்டும் என்பது அவர் திட்டம். ஆனால், அதன் உரிமை டிஸ்னியின் கையைவிட்டுப் போனது. அதன் பிறகு, அவர் உருவாக்கிய கார்ட்டூன் கதாபாத்திரம்தான், மிக்கி மவுஸ்.

முதல் உலகப் போரின்போது… கட்டாய ராணுவச் சேவையில், ஆம்புலன்ஸ் ஓட்டும் பணியில் இருந்தார் டிஸ்னி. அந்த ஆம்புலன்ஸில்  விலங்குகளின் படங்கள் வரையப்பட்டிருந்தன. அதைப் பார்த்து ஓவியம் வரையத் தொடங்கினார். இவர் சாப்பிட்டு மீதம் போடும் உணவை உண்பதற்காக, சில எலிகள் இவரது வீட்டில் சுற்றிக்கொண்டிருந்தன. அதில் ஒரு எலி, வால்ட் டிஸ்னியின் உள்ளத்தைக் கொள்ளைகொண்டது. அதுதான் டிஸ்னியின் கற்பனையில், சாகச எலியாக மாறியது.

தனது நண்பர் உப் ஐவெர்க்ஸ் உடன் இணைந்து, அந்த எலிக்கு ‘மார்டிமர் மவுஸ்’ என்று பெயர் வைத்தார். ஆனால், டிஸ்னியின் மனைவி லில்லியனுக்கு இந்தப் பெயர் பிடிக்கவில்லை. அவர் மாற்றிவைத்த பெயர்தான், மிக்கி மவுஸ். சில படங்களில், மிக்கி மவுஸின் எதிரி கதாபாத்திரத்துக்கு மார்டிமர் மவுஸ் பெயரைச் சூட்டினார் டிஸ்னி.

தொடக்கத்தில் கறுப்பு வெள்ளையில் வெளியான மிக்கி மவுஸ் படங்கள்,  ‘த பேண்ட் கான்சர்ட்’ படத்திலிருந்து வண்ணத்துக்கு மாறியது. பிறகு, 1940-ம் ஆண்டு முழு நீளத் திரைப்படங்களில் தோன்ற ஆரம்பித்த மிக்கி மவுஸ், ஒன்பது முறை ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, ஒரு முறை ஆஸ்கர் விருதையும் வென்றது.

மிக்கி கதாபாத்திரத்தை வைத்து, இரண்டு குறும்படங்களை உருவாக்கினார் டிஸ்னி. ஆனால், அவை வெளியிடப்படவில்லை.  ‘மிக்கியின் அறிமுகம் பிரமாண்டமாக அமைய வேண்டும்’ என்று தீவிரமாக உழைத்தார். மிக்கிக்கு டிஸ்னியே குரலும் கொடுக்க, 1928 நவம்பர் 18-ல் வெளியானது ‘ஸ்டீம்போட் வில்லி’ என்ற திரைப்படம். ஒலியுடன் சேர்ந்து வெளியிடப்பட்ட முதல் அனிமேஷன் படம் இதுதான். இதற்கு மக்களிடையே அமோக வரவேற்பு. ஆனாலும், ‘இது கோபக்கார எலி’ என்றார்கள். பிறகு வெளிவந்த கார்ட்டூன்களில்… மிக்கி மவுஸ் சமர்த்தாக மாறியது.

மிக்கி மவுஸ் கதாபாத்திரத்தை உருவாக்கியதற்காக டிஸ்னிக்கு கௌரவ ஆஸ்கர் பரிசு வழங்கப்பட்டது.  ‘டிஸ்னி வேர்ல்டு’ என்னும் சாம்ராஜ்யமும் உருவானது. உலகெங்கும் பல இடங்களில் டிஸ்னி தீம் பார்க்குகளை டிஸ்னி அமைத்தார். தீம் பார்க்குகளில் பல இடங்களில் மிக்கி மவுஸின் உருவம் நிழல் போல வரையப்பட்டு இருக்கும். ஒளிந்திருக்கும் இந்த மிக்கி மவுஸ்களைக் கண்டுபிடிக்கும் விளையாட்டு, சுட்டிகளின் பெரிய பொழுதுபோக்கு.

(சுட்டி விகடன் 15-12-2013)

Comments

Leave a Reply