ஹாலிவுட் பாலா தன்னுடைய அக்கரைச் சீமையில் தொடர்பதிவாக எழுதிய போது, கேபிளார் இந்த பிக்ஸாரின் கதையை ஒரு புத்தகமாக கொண்டு வர வேண்டும் என்றார். ஹாலிவுட் பாலா மறுத்தார். நான் உட்பட பலரும் மின்நூலாகவாவது கொண்டு வாருங்கள் என்றோம், இத்தனை மாதம் இழுத்தடித்து, ஒரு அச்சுப் புத்தகத்தின் மின்வடிவம் போலவே இந்நூலைத் தந்திருக்கிறார் ஹாலிவுட் பாலா .
A pixar story என்ற டாக்குமென்ட்டரியிலிருந்தும், இணையத்திலிருந்தும் எடுத்த தகவல்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன் என்று ஹாலிவுட் பாலா சொன்னாலும் அதில் அவர் ஒரு விஷயத்தைச் சேர்க்காமல் விட்டு விட்டார். அது அந்த மொழிபெயர்ப்பை, அவருடைய மொழி நடையில் சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான், அந்த அவ்வளவுதான் முக்கியமே. எழுத படிக்க மட்டுமே தெரிந்தால், பதிவராவது சாத்தியமென்றாலும் கூட இந்த மொழிநடை முக்கியம். (அது கை வராமல் காணாமல் போனவர்களை எந்த எலக்கியவாதி பார்த்திருக்கிறாரோ இல்லையோ, இந்த பதிவுலகம் பார்த்திருக்கிறது.) ஹாலிவுட் பாலாவின் அந்த எழுத்து நடைதான் பலமே. சமீபத்தில் உஜிலாதேவி என்ற பதிவாசிரியர் கூட பாலாவின் இந்த எழுத்து நடையை புகழ்ந்ததை உலகமே அறியும். கேபிளார் இதை புத்தகமாக்கும் முயற்சியில் இறங்க வேண்டும். ஹாலிவுட் பாலாவும் எத்தனை நாளைக்குத்தான் பதிவராகவே இருப்பது அவரும் சீக்கிரத்தில் ரைட்டராகி, எலக்கியவியாதி ஆக வேண்டும்.
பதிவாக வந்த போதே நாம் எல்லாரும் பின்னூட்டங்களில் விமர்சித்துவிட்டோம், அதனால், ஹாலிவுட் பாலாவின் மொழிநடையையும், குறும்பையும் மட்டும் இங்கு மேற்கோளிடுகிறேன்.
- கம்பெனியை வாங்கிய பின் எதுவும் போணியாகாததால்… முறையே ஈ,எறும்பு, கொசு மற்றும் தேனீ என எல்லாவற்றையும் ஓட்டிக்கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் ஓட்டுவதற்கு கடையில் எதுவுமில்லாமல், வேலையிலிருந்த முக்கால்வாசி பேரை வீட்டுக்கு ஓட்டிவிட்டார்.
- ஓரளவு முடிந்த படத்தை, மற்ற மக்களுக்கு போட்டுக் காட்ட… யாருமே எதிர்பாராத மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது …………………………….-ன்னு நினைச்சா… ஹையா… நீங்க October Fool!
- நாம் இன்னும் 2005-ஆம் ஆண்டில்தான் இருக்கிறோம். முடிந்த வரை, இதே ஆண்டில் வைத்தே கதை சொல்லப் பார்க்கிறேன். டார்டாய்ஸை சுத்தியே ஆக வேண்டுமென்றால்…. கொசுவர்த்தி அலர்ஜி இருப்பவர்கள் மன்னிக்கவும்.
- இனி நமக்கும் அவருக்கும் தொடர்பில்லை. அவர் ஊதி விட்ட பிக்ஸார் புகை மட்டுமே இன்னும் இருந்தது. ஆனாலும்… அவருடைய பெயரை… ரப்பர் போட்டு… உங்க மெமரியில் இருந்து அழித்துவிடவும். ஆச்சா????? இங்கே இந்த புதுப் பெயரை… ஆளுக்கு, 100 தடவை… மனசுக்குள்ளயே… சொல்லி நியாபகத்துல வச்சிக்கங்க பார்ப்போம்!!!
- ராபர்ட், இதற்கு முன் இருந்த டிஸ்னி CEO-க்கு (அதான் பேரை ரப்பர் போட்டு அழிச்சிட்டீங்க…இல்ல!), ஜால்ரா அடித்துக் கொண்டிருந்தவர். ‘இவராவது தன் குடும்ப நிறுவனத்தின் பெயரை காப்பாற்றுவாரா’ - என்பது ராய்(டிஸ்னி)-யின் கவலை. ‘இந்த குரங்காவது தன் பங்கு ரொட்டியை சரியாக பிய்த்துத் தருமா’ -என்பது ஜாப்ஸின் கவலை.
- பிக்ஸார் அனிமேட்டர்கள், அவர்களின் மற்ற குல வழக்கங்களான…., ‘சுவற்றில் முட்டிக் கொள்ளுதல்’, ‘முடியை பிய்த்துக் கொள்ளுதல்’ போன்றவற்றை ஆரம்பித்தனர்.
மொழிநடையைச் சொல்ல இன்னும் அதிக உதாரணங்களை மேற்கோள் காட்ட வேண்டியிருக்கும் என்பதால் இத்தோடு முடித்துக் கொள்ளலாம், இன்னும் சொல்ல வேண்டிய விஷயங்கள் இருக்கிறது, அதையும் சொல்லிவிடுகிறேன்.
பிக்ஸார் எப்படி, தன்னுடைய 3Dஅனிமேஷன் கேரக்டர்களுக்கு மெனக்கெட்டதோ, அதைப்போலவே பாலாவும், எளிமையாய் அவர்களின் தொழில்நுட்பங்களைச் சொல்ல மெனக்கெட்டிருக்கிறார், முக்கியமாக ரென்டரிங்கையும், ரே ட்ரேசிங்கையும், விளக்குவதற்காக படித்து அதைப் புரிந்து கொண்டு, புரிந்து கொண்டதை குறை வைக்காமல், விளக்கியெழுதி, வாய்ப்பேயில்லை, பிக்ஸாரின் டெடிகேஷனைப் பாலா சொன்னார், இதை என்னவென்று சொல்வது?
அதே போல பதிவு எழுதி முடித்து இத்தனை மாதங்களுக்குப் பிறகு இதை மின்நூலாக்குவதால் வரும் ஒரு பிரச்னை, தகவல்களும் தரவுகளும் மாறிக்கொண்டேயிருப்பதுதான், அதைச் சரி செய்யும் பொருட்டு, அப்டேட்ஸ் என்று, அந்த காலவதி தகவல்களுக்குப் பக்கத்திலேயே சொல்லியிருப்பதைப் பாராட்டியே ஆக வேண்டும். ஒரு குறை, ஒரு இடத்தில் டாய் ஸ்டோரி3 க்கு இன்னும் 3மில்லியன் மட்டுமே தேவை எனக்குறிப்பிட்டிருக்கும் ஹாலிவுட் பாலா, பின்னால் டாய்ஸ்டோரி முதல் இடத்தைப் பிடித்ததையும் சொல்லியிருக்கிறார், அப்டேட்டுக்கு அப்டேட் போட மறந்துட்டார் (நான் இந்தக் குறையைச் சுட்டிக்காட்டவும் காரணம், விமர்சனமெல்லாம் போடாதீங்க, போட்டாலும், சென்ஷி மாதிரி புகழ்ந்துடாதீங்க, I feel shy You know...எனக் கேட்டுக்கொண்டதாலேயே. மற்றபடிக்கு இதெல்லாம் பெரிய குறையே இல்லை.
இப்போதைக்கு இம் மின்நூலை, www.scribd.comல் நான் வலையேற்றியிருக்கிறேன், இங்கிருந்து நீங்கள் தரவிறக்கிக் கொள்ளலாம்.அதேபோல ஹாலிவுட் பாலாவும் கூகிள் டாக்சில் வலையேற்றீயிருக்கிறார், அங்கிருந்தும் தரவிறக்கிக் கொள்ளலாம்.

நீங்களுமா?
வெளையாட்டுக்கு கேட்டது என் தப்பு.
)
==
//ஒரு இடத்தில் டாய் ஸ்டோரி3 க்கு இன்னும் 3மில்லியன் மட்டுமே தேவை எனக்குறிப்பிட்டிருக்கும் பாலா, பின்னால் டாய்ஸ்டோரி முதல் இடத்தைப் பிடித்ததையும் சொல்லியிருக்கிறார்//
ஊகும்…!! சென்ஷி இதைப் பத்தி சொன்னப்பவே ஒரு டவுட் வந்துச்சி.
01. அனிமேஷன் படத்தில் முதலிடத்தில் இருப்பது Alice In Wonderland. 23-ஆவது பக்கம்
02. Toy Story 3-க்கு இன்னும் 3 மில்லியன் மட்டுமே இருப்பதா சொன்னது, Shrek 2-ஐ முந்த. 23-ஆவது பக்கம்
03. Toy Story 3 – கலெக்ஷனில் முதலிடத்தில் இருப்பதா சொன்னது ‘பிக்ஸாரின்’ படங்களிலேயே!!! 42-ஆவது பக்கம்.
ஒஹோ அப்டியா நமக்கு அறிவு கொஞ்சம் கம்மி.