சின்ன வயசில, ஒரு முறை என்னோட நன்பனுக்கு மட்டும் தெரியிற மாதிரி ஒரு தப்பு பண்ணிட்டேன். அதை அவன் என் அம்மாகிட்ட சொல்லிடுவேன்னு என்னை மிரட்டிகிட்டே இருந்தான், ஏற்கனவே அம்மா ஆசிரியைகளுக்கே உரித்தான பிரம்படி வைத்தியம் தெரிந்து வைத்திருந்த ஒரு வைத்தியச்சி, காரணத்தோட மாட்டினா வெளுத்து வாங்கிடுவாங்கன்னு பயத்தோட அவன் கேட்டத எல்லாம் செய்தேன், எல்லாம் செய்தேன்னா? சின்ன வயசு மாஃபியாத் தனம் தான், ஒன்னாச் சேந்துகிட்டு நம்மளுக்கும் கீழ படிக்குற பசங்களோட பல்பம் பிடுங்குறது, நம்ம சிலேட்டுக்கும் சேர்ந்து அந்த பசங்களையே கோவத்தழை போடச் சொல்றது, இப்படிப் பட்ட வேலைங்க தான். அந்த பள்ளிக்கூடத்தோட டீச்சர் பையன்றதுனால சின்ன பசங்களும் கொஞ்சம் பயந்துகிட்டு செய்வானுங்க, இதுக்காகவே அந்த நண்பன் என்னை கூட்டு சேர்ந்துகிட்டு இந்த வேலை எல்லாம் செய்றதுக்காக காத்துகிட்டு இருந்தப்போ நான் மாட்டிகிட்டேன். அவன் அதே மாதிரி ஒரு தப்ப செய்த அப்போ என் கிட்ட மாட்டினான். பிளாக் மெயிலுக்கு பிளாக் மெயில் சரியாப்போச்சுன்னு கதை முடிஞ்சது. நான் அந்தப் பள்ளிக்கூடத்த விட்டு வேற பள்ளிகூடத்துக்கு மாறுற வரைக்கும் இப்படியே கண்ணாமூச்சி ஆட்டம் ஆடியிருக்கோம். அந்த தப்புகள் இப்போ ஞாபகத்துல இல்ல, ஆனா அப்படி பிளாக்மெயில் பன்னப்போ ஏற்பட்ட மன உளைச்சல் மட்டும் தான் இன்னைக்கு வரைக்கும் அந்த மாபியா ஆட்டத்த ஞாபகம் வைச்சிருக்க உதவி செய்யுது. இப்படி ஒரு மன உளைச்சலை ஏற்படுத்தற பிளாக்மெயில் டைப் படம் தான் PHONE BOOTH.
ஒரு பாட்டுக்காக, முடியும்னா அண்டார்டிக்காவுக்கு கூட போறதுக்குத் தயாரா இருக்க தமிழின் பிரம்மாண்ட இயக்குநர் (இப்போ புதுசா இன்னொருத்தரும்) பார்க்க வேண்டிய படம் இது. ஒரு தெரு முக்கு, இன்னும் கொஞ்ச நாள்ல காணாம போகப் போற ஒரு கிரஹாம் பெல் காலத்து டெலிபோன் பூத், அந்த பூத்துக்குள்ளாற ஒருத்தன், அவனை மேல இருந்து கவணிச்சிட்டு, அவனை மிரட்டுற இன்னொருத்தன். அந்த பூத்துக்குள்ளாற இருக்குறவனோட மணைவியும், துணைவியும், அந்த தெரு முக்குல நடக்குற ஆர்ப்பாட்டத்த அடக்குறதுக்கு வர கொஞ்சம் போலிஸ். அந்த இடத்த விட்டு வேற எங்கயும் போகாத கேமிரா. (ஆனா அதுக்குள்ள எவ்ளோ முடியுமோ அத்தனை கேமிரா கோணங்கள். Hats of to camera man) இதுமட்டுமில்லாம, வலுவான கதை அதுக்கேத்த திரைக்கதை, இது இரண்டையும் கட்டி மேய்க்குற ஒரு இயக்குநர், இது எல்லாமும் இந்த படத்தோட பலம்.
ஒரு நியூஸ் மேக்கர், தன் மனைவிக்கு தெரியாமல் துனைவியிடம் கொஞ்சுவதற்கு ஒரு தெரு முக்கில் இருக்கும் போன் பூத்தை திணமும் பயன்படுத்துகிறான். இவன் தினமும் பேசுவதை கவணிக்கும் ஒரு கண்கானி. நல்ல முன்னேற்பாடுகளுடன் ஒரு நாள் தயாராகிறான், சின்ன சின்ன விஷயங்களையும் கவணமாய் செய்கிறான். தன் துணைவியை கொஞ்சிவிட்டு வெளியேறத்துவங்கும் போது, ஒரு போன்கால் வருகிறது. விளையாட்டாய் அந்த அழைப்பிற்கு செவி சாய்க்கப் போக அவன் வாழ்க்கையே காணாமல் போகிறது.
அந்த அழைப்புக்கு அவன் பதில் அளிக்கத் துவங்கிய நேரத்திலிருந்து அவன் முழுவதுமாய் அந்த கண்கானியின் கட்டுப்பாட்டில் வந்துவிடுகிறான். இவனுக்குத் தன்னுடைய உறுதியைக் காட்டுவதற்காக அந்த கண்கானி செய்யும் செயல் ஒன்றில் ஒரு உயிர் போக, போலிஸ் கூடிவிடுகிறது. மேலேயிருந்து ஒருவன் மிரட்ட கீழே போலிஸ் இவனை சரணடையச் சொல்ல இருதலைக்கொள்ளி எறும்பு போல தவிக்கிறான். ஒன்று இவன் சாக வேண்டும், அல்லது அவன் வாயால் அவனது தவறுகளை ஒப்புக்கொள்ள வேண்டுமென்பது அந்த கண்கானியின் கோரிக்கை.
முதலில் ஒவ்வொரு கட்டளைக்கும் இவன் கட்டுப்பட்டு முதலில் தலையாட்டுவதும், இவன் தலையாட்டி முடித்ததும், அவன் தலையையே பரிசாய் கேட்பதும். ஏதோ நம் நெற்றிப்பொட்டில் யாரோ துப்பாக்கியை வைத்து அழுத்தத் தயாராய் இருப்பது போலவும் நம் மண்டை வெடித்துச் சிதறுவது போலவும் நமக்குத் தோன்றுகிறது, இதுதான் இந்த படத்தின் திரைக்கதையின் பலம்.
அந்த போலிஸ் அதிகாரி மட்டுமே இவனது தவிப்பை உணர்ந்து கொள்கிறார். அவன் இவரிடம் தன்னுடைய நிலையை மறைமுகமாய் சொல்வதும். அவரும் இவனிடம் செய்ய வேண்டிய காரியங்களையும் செய்த காரியங்களையும் மறைமுகமாய் சொல்வதும் அருமை. அந்த போலிஸ் அதிகாரியிடம் இவனை கேட்கச் சொல்லும் கேள்வியும், அதை அவன் மென்று முழுங்கி கேட்பதும், அவன் கேட்டபிறகு, அவர் அதை எதிர்கொள்வதும் உச்சம்.
இவனை நீ அசையாதே என்று போலிஸ் துப்பாக்கியை நீட்டி மிரட்டுவதும், அந்த நேரத்தில் இவனது செல்போன் ஒலிக்க, அது உன் மனைவியாகவும் இருக்கலாம் பேசு என்று அவன் மிரட்டுவதும் அந்த நேரத்தில் அவன் அடையும் மன உளைச்சலையும், அந்த மன உளைச்சலை அவன் முகத்தில் பிரதிபலிக்கும் விதமும் அபாரம். வார்த்தைகளில் சொல்வது கடிணம் தான்.
ஒரு தெரு முக்கு, அங்கே ஒரு போன் பூத், ஒரு போன் கால், மிரட்டும் நபர், மிரட்டப்படும் நபர், அடுத்தவர்களுக்கு அங்கு நடப்பது ஏதோ இனம் புரியாத ஏடாகூட சம்பவம், மிரட்டப்படுபவனுக்கு அது வாழ்வா?, சாவா? போராட்டம், மரணம், மரணம் மட்டுமே என்பது அவனுக்கு புரியும் நேரத்தில் சாகத் துணிகிறான். மிரட்டுபவனுக்கு அது பேராணந்தம், அவன் அடையும் மன உளைச்சலில் இவன் இண்பம் காண்கிறான், துப்பாக்கியின் விசை அழுத்தப்படும் சத்தத்தில் ஆண்டவனைக் காண்பது போன்ற பேராணந்தம் அடைகின்ற ஒரு சாடிஸ்ட். நம்மைப் போலவே நடந்ததையும் நடப்பதையும் புரிந்து கொள்கிற ஒரே ஆள் அந்த போலிஸ் அதிகாரி, அவரை இக்கட்டுக்குள் தள்ளும் விதமாக அவன் கேட்கச் சொல்லும் கேள்விகள், சென்ஸார் ரகங்கள், அந்த கேள்விகளின் போது கடுப்பாகி, கௌதம் மேனன் பட போலிஸ்காரர்களைப் போல …த்தா வார்த்தைகளைப் பயன்படுத்தாத அபூர்வ ரக போலிஸ்காரர். நடப்பது புரியாமல், விழித்துக் கொண்டிருக்கும் மணைவியும் , துணைவியும் என ஐந்து நபர்களை வைத்து நம்மை ஒரு ஒன்றரை மணிநேரம் கட்டிப்போடுகிறார்கள்.
