எல்லோருடைய வாழ்விலும் ஒரு மொக்கைச் சாமியை, ஒரேயொரு முறையாவது சந்தித்திருப்போம், ஏன் நாமே கூட பலருக்கு மொக்கைச்சாமியாக இருந்திருப்போம். கல்லூரியில் மூன்று ஆண்டுகள் இந்த மொக்கைச் சாமிக் குழுவில் நானும் இருந்திருக்கிறேன், உலகமகா மொக்கையன் என்று பெயர் கொடுக்குமளவிற்கு ஒரு மொக்கைச்சாமி எங்கள் தோள்களில் ஏறி உட்கார்ந்து கொண்டு மொக்கை போட்டுக் எங்களை கடுப்பேற்றினான், உன்னை மொக்கை போடுவதில் மிஞ்சுவதற்கு ஒரு ஆளும் இல்லை என்று நானே சொல்லியிருக்கிறேன். அப்போது எனக்கு பேயோனைத் தெரியாது, ஏன் அப்போது பேயோனே கிடையாது. பேயோனுக்கு இன்னும் ஒரு வயது கூட முடியவில்லை. ஆனால், இப்போது அந்த மொக்கைச் சாமியைப் பார்த்தால் சொல்வேன், உன்னை மிஞ்சவும் ஒரு ஆள் இருக்கார்யான்னு. இதற்கும் பேயோன் என்ன சொல்வார் தெரியுமா? உலக இலக்கியங்களை தமிழில் படைக்கும் என்னை மொக்கைச்சாமி என்கிறான் இவன், நான் மொக்கைச்சாமிகளுக்கெல்லாம் மொக்கைச்சாமி ஆயிற்றே என்பார்.
“இரண்டாயிரம் ஆண்டுகால தமிழிலக்கிய வரலாற்றில் ட்விட்டர் பதிவுகள் நூல் வடிவம் பெறுவது இதுவே முதல் முறையாகும்” என்று பேயோன்1000 நூலின் பின்னட்டை சொல்கிறது. இதிலேயே தெரிந்து கொள்ளலாம் இவரின் குசும்பை. இப்படி நூல் முழுக்க 140 வார்த்தைகளுக்கும் குறைவாகவே இவரின் மொக்கைகள் ( இவருடைய எழுத்துக்களை மொக்கை என்பதில், பல சமயம் எனக்கு உடண்பாடில்லை, அதையும் தாண்டி நிற்பவை அவை), குசும்புகள் ஆச்சரியம் தருபவை, அதிலும் இவரே ஆச்சரியமானவர் தான். இவர் என்ன ஆச்சரியமானவர் என்பது பின்னால். இப்போது இவருடைய மரண மொக்கைகளிலிருந்து சில,
இன்று ஆலிவர் ஸ்டீனின் பிறந்த நாள். குழந்தையாகப் பிறந்த அவர் உழைப்பால் வளர்ந்து,Born on the 5th july, platoon ஆகிய சிறந்த படங்களை இயக்கினார்.
நேற்று அரசி தொடர் பார்க்கவில்லை. மெகாஅப்லோடில் கிடைக்காது. இரவெல்லாம் கணினியை அடைத்துவிட்டு இருளில் அமர்ந்த படியே செயலற்று இருந்தேன்.
குரோசோவா Ran கதையை சேக்ஸ்பியரிடம் திருடியதாக சர்ச்சை எழுந்தது. ஆனால் சேக்ஸ்பியரே பெர்னாட் ஷாவிடம் அக்கதையைத் திருடியதால் விவகாரம் வளரவில்லை.
100டிவிடி அட்டைகள் தேவைப்படுகிறது. கதை, இயக்குனர் பெயர், வெளிவந்த ஆண்டு ஆகியன உள்ள அட்டைகள் போதும். உலக சினிமா பற்றி எழுத வேண்டும்.
என் புதிய நாடகம் தூக்கு கைதிகளுக்காக அரங்கேற்றப் பட இருக்கிறது. மரனத்தைவிட கொடியவை உண்டு என காட்டுவதற்காம். நல்ல விஷயத்திற்கு பயண்பட்டால் சரி.
மொத்தமே 2660 வரிகள்தான் எழுதியிருக்கிறார் திருவள்ளுவர்.இந்தியா சுதந்திரம் அடைந்தபின்னரும் இந்த எண்ணிக்கை மாறவில்லை.
12வயதில் என் மகன் டிவியில் கம்ப்யூட்டர் கேம் ஆடுகிறான். அந்த வயதில் நான் டிவியையே டிவியில் தான் பார்த்திருக்கிறேன். நேரில் பார்த்ததில்லை.
தற்காலிக உண்மைகளைப் பற்றிய நிரந்தர உண்மைகளை எழுதுபவனே எழுத்தாளன். இது நான் எழுதியதுதான். இருந்தாலும் யாரவது எனக்கு புரிய வைத்தால் நல்லது.
காலை தெருவில் கொட்டாவி அடக்க கை தூக்கினேன். பதறி ஓடியது ஒரு நாய். என் நிலைப்பாட்டை தெளிவு படுத்த அதன் பின்னே ஓடினால் அது மேலும் வேகமாய் ஓடியது.
பேயோன்1000 நூலில் முன்னுரையே கிடையாது, முன்னுரைக்குப் பதிலாக என்னைப் போல பத்தி எழுதுவது எப்படி? என்று எழுதியிருக்கிறார். இதுவரை நான் படித்த நகைச்சுவைக் கட்டுரைகளிலேயே இதுதான் ஆகச்சிறந்த நகைச்சுவை கட்டுரை. இதைப் படித்த பிறகு பல பெரிய எழுத்தாளர்களது பத்திகளை எல்லாம், சந்தேக கண் கொண்டே பார்க்கத் தோன்றுகிறது. முக்கியமாக எஸ்.ராவின் துணையெழுத்து, தேசாந்திரி நூல்களை.
பேரோனுடைய ட்வீட்டுகளை சில சமயம் குறுஞ்செய்திகள் வழியாகப் பலருக்கும் அனுப்பி, எகனை மொகனையாக திட்டு வாங்கியிருக்கிறேன், அந்த அளவுக்கு மொக்கையாம். ஆரம்பம் முதலே மொக்கை மொக்கை என்று எழுதுவதால், இவர் சும்மா காமெடி பீஸ் என்று எண்ணிவிடாதீர்கள், 140 எழுத்துகளில் உலகசினிமாக்களை விமர்சிப்பதாகட்டும், மொழிபெயர்ப்பு கவிதைகளை மொழிபெயர்க்காததாகட்டும், இரவு வணக்கங்களாகட்டும் பேயோனை மிஞ்ச ஆள் இல்லை.
ஏறக்குறைய இவருடைய ஒவ்வொரு ட்வீட்டுகளையும் படித்திருக்கிறேன். ஆனால், இவருடன் நான் விவாதத்தில் இறங்கியதே இல்லை, அதற்கெல்லாம் இன்னும் வளரவேண்டும். ஆனால், இவருடன் விவாதிக்க, வாதாட, எதிர் மொக்கை போட என்றே பலரும் இருக்கிறார்கள். ட்விட்டரின் முக்கியமான தமிழ் ஆளுமைகளில் இவர் முக்கியமானவர்.
பேயோன்1000 நூலில் 1000 ட்வீட்டுகளில் 1000 ட்வீட்டுகளுமே பேயோனே எழுதியது கிடையாது. அவர் வான்கோழி, ச்சீ வான்கோ, அய்யோ!!! வான்கா (யாரைய்யா இந்த ஆளுக்கு பெயர் வைத்தது) தங்கியிருந்த வீட்டைப் பார்வையிடச் சென்றிருந்த போது, பேயோனின் மொழிபெயர்ப்பாளர் லார்டு லபக்குதாஸ் கிட்டத்தட்ட இருபது ட்வீட்டுகளை அள்ளித்தெளித்திருக்கிறார். அதே போல பாஷோவின் கவிதைகளை மொழிபெயர்ப்புச் செய்ததும் இவர் தான். அதனால், 1000 ட்வீட்டுகளும் பேயோனுக்குச் சொந்தமானது இல்லை.
பேயோன் என்ற முகத்திரைக்குள் ஒளிந்திருக்கும் இன்னொரு முகத்திரைதான், லார்டு லபக்குதாஸ். ஆம், பேயோன் இன்னொருவரின் முகத்திரைதான். ட்விட்டருக்காக அவர் போட்டுக்கொண்ட முகத்திரை தான் பேயோன்.
நான் தமிழின் மிகப்பெரிய எழுத்தாளன் என்பார், பல நாவல்கள், நூல்கள் எழுதியிருக்கிறேன் என்பார், பல திரைப்படங்களுக்கு வசணம் எழுதியிருக்கிறேன் என்பார், ஆனால் எங்குமே இதுவரை பேயோன் என்கிற பெயரையே பார்த்ததில்லை என்றால், சுய எள்ளலுடன் பதில் சொல்வார்.
இவருடைய எழுத்துக்கள் எஸ்.ரா வை பெரும்பாலும் ஒத்திருக்கும், அதனால் எஸ்.ரா தான் பேயோன் என்ற பெயரில் எழுதிகிறாரோ என்ற சந்தேகம் இருந்தாலும் வேண்டுமென்றே இவர் இப்படி எழுதுகிறார் என்று எல்லோரும் சொல்கிறார்கள்.
என்னைப் போல பதிவு எழுதுவது எப்படி என்னும் முன்னுரைக்கு பதிலான கட்டுரையில் இவர் எஸ்.ரா தானோ என்று எண்ணுவதற்கு கூடிய பல சாத்தியப்பாடுகளோடே எழுதியிருக்கிறார். குழந்தைகளை கூட விட்டு வைக்காமல் அவர்களுக்கும் புத்தகங்களை எழுதியிருக்கிறேன் என்கிறார், ஏழுதலை நகரம் நூலைச் சொல்கிறாரோ. “…அவர் என்னிடம் பேச விரும்பி கூச்சத்தால் தயங்கியது போல் தெரிந்தது. நானே அவரிடம் மெல்ல பேச்சு கொடுத்தேன். நான் அவரது பள்ளி ஆசிரியரைப்போல இருந்ததாகவும், ஆனால், அந்த ஆசிரியருக்கு ஏழு கண்கள் என்றும் அவர் கூறினார்.” என்றும் அவர் எழுதுகிறார். இதைப்போன்ற செய்திகளை ஏழுதலை நகரம் நாவல் முழுதும் காணலாம். அதேபோல பல இடங்களிலும் எஸ்.ராவையே நிணைவூட்டுகிறார்.
யுவகிருஷ்னா, (பதிவுக்குச் சம்பந்தமில்லாத செய்தி: யுவகிருஷ்னாவைச் செம்மொழி மாநாட்டில் சந்தித்தேன். அருளெழிலன் இப்படி இருப்பார் என்று அவர் எப்படி கற்பனை செய்து வைத்து ஏமாந்து போனாரோ, அதேபோல நான் லக்கியைப் பார்த்து ஏமாந்துவிட்டேன். அதிலும் பாலபாரதி பக்கத்தில் லக்கியைப் பார்த்ததும் இத்தனை குள்ளமாக, ஒல்லியாக
) பேயோன் யார் என்று கண்டுபிடிக்க அதிதீவிரமாக இருக்கிறார். பாரா விடம் சென்று நீங்கள் தான் பேயோன் என்று ஒத்துக்கொள்ளுங்கள் என்று கெஞ்சியிருக்கிறார். பேயோன் தான் என் குரு என்று யுவகிருஷ்னா சொல்லுவதை வைத்து பாரா தான் பேயோனோ என்று நான் கூட யோசித்தது உண்டு. செம்மொழி மாநாட்டில் ஆழி நாகராஜனைப் பார்த்தும் நீங்கள் தானே பேயோன் என்று யுவ கிருஷ்னா கேட்டிருக்கிறார். பேயோனே அவருடைய ஒரு ட்வீட்டில் சொல்லியிருக்கிறபடி, (போனில் இணிய குரலில் என் முகவரி கேட்ட 20 வயது வாசகிக்கு என் வீட்டிற்கு வந்து சேரும் போது 55 வயதாகிறது. ஒரு ஆட்டோ பயணத்தில் 35 வயது ஏறிவிடுமா? ) யாரவது அழகிய குரலுக்கு சொந்தக்காரர் கேட்டால் தான் அவர் முகவரியைத் தருவாரோ? ஆனால் அந்த அழகிய குரலுக்குச் சொந்தக்காரர், ஒரே பயணத்தில் 35 வயது ஏறிவிடுவதைச் சம்மதிப்பாரா தெரியவில்லை. இப்படி எதாவது செய்து பேயோன் யார் என்று தெரிந்து கொண்டால் தான் உண்டு.
பேயோன் எஸ்ரா வாக இருக்கட்டும் அல்லது பேயோனாக இருக்கட்டும், யாராக இருந்தாலும் இருக்கட்டுமே. ரோஜவை எந்த பெயரில் அழைத்தால் என்ன?
பேயோனை ட்விட்டரில் பின் தொடர
என்னை ட்விட்டரில் பின் தொடர
நூலினை வாங்க,
பேயோன் 1000 – ட்விட்டர் நுண்பதிவுகளின் தொகுப்பு,
ஆழி பதிப்பகம்
12, முதல் பிரதான சாலை,
யுனைட்டட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம், சென்னை-24.
விலை: ரூ60
என்னைப் போல பத்தி எழுதுவது எப்படி? என்ற கட்டுரையைப் படித்துச் சிரிக்க.
