வெய்யில் காயாத இரவொன்றில், செவ்வாயிலோ, வியாழனிலோ வாழ முடியாது என்பதைப்பற்றியெல்லாம் தெரியாமல், இந்தப் பூமியில் பிறந்துவிட்டேன். பள்ளிப் படிப்பெல்லாம் வீட்டின் சுவரைத் தாண்டி குதித்தாலோ அல்லது தடுக்கி விழுந்தாலோ அடைந்துவிடும் தூரத்திலிருந்த ஒரு பள்ளியிலேயே…
வீட்டில் தனியாக விட்டுவிட்டு பள்ளிக்குச் செல்ல யோசித்துக்கொண்டு என்னையும் கூட்டிக் கொண்டு போய் முதல் வகுப்பில் உட்காரவைத்த காரணத்தினால், முதல் வகுப்பையே இரண்டுமுறை படிக்கும் வாய்ப்பு. அந்தளவுக்கு படிப்பில் படு கெட்டித்தனத்துக்கான அடிப்படையை போட்டுவிட்டார்கள்.
மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு, இலயோலாவில் இயற்பியல் இளங்கலை படித்தேன். கல்லூரிக்குச் செல்லும் காலத்தில், டிவிடிக்களாகவும், பைட்டு பைட்டுகளாக எழுநூறு மெகா பைட்டுகளாக மாற்றிப் படம் பார்த்தோம். புத்தகங்களைக் கைமாற்றி அதிகம் வாசித்தோம், கணினிகளில் விளையாடினோம், ஆறுமாதங்களுக்கொரு முறை தேர்வுகளுக்காக படித்தோம். இப்படியாக கழிந்து கொண்டிருந்த கல்லூரிக் காலத்தில் விகடனில் மாணவப் பத்திரிக்கையாளனாக ஓராண்டு பணி முடித்து வலைப்பதிவுகளில் இன்று வாசம் புரிந்து கொண்டிருக்கிறேன்.
கணினிகளை இயக்கக் கற்ற பிறகு, வின்டோஸின் கட்டுப்பாடுகள் நமக்கு ஒத்துவராது என்று மனதுக்குத் தோன்றிய நாள் முதல் திறந்த உலகத்தை நாடி வந்தேன். திறந்த மூல மென்பொருட்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்க இடம் கொடுத்தது. அனுமதியளித்தது, அப்படி நோண்டி நோண்டி கற்றுக்கொண்ட விஷயம் வேர்ட்பிரஸ். இன்று பணி அந்த வேர்ட்பிரஸ்ஸில்.
நூறு ஆண்டுகளுக்கு முன்னால் தன் போராட்டத்தைத் துவக்கிய கிழவனின் பிரச்சாரமும், போராட்டங்களும் விளைவித்த பயண்களின் விளை பொருள் நான் என்றால் அது மிகையில்லை, அதை ஏற்றுக்கொள்ள என்றும் தயங்காதவன் நான். ஈ.வே.ராமசாமி என்னும் பெரியார் தோன்றாமல் போய் புரையோடிப்போயிருந்த இந்தச் சமூகத்தை நான் அறுவை சிகிச்சை செய்யப் போகிறேன், என்று கிளம்பாமல் இருந்திருந்தால் என் பாட்டன் மாடு மேய்த்துக் கொண்டுதான் இருந்திருப்பான் -இதை வார்த்தைக்காகச் சொல்லவில்லை, உண்மையிலேயே மாடு மேய்த்துக் கொண்டிருந்தவன், வீட்டுக்குத் தெரியாமல் ஒரு மாட்டை விற்று அந்தக் காசை எடுத்துக் கொண்டு ஊரை விட்டு ஓடிப் போய் படித்து ஆசிரியரானவன். உன்னைப் போன்ற ஆசிரியர்கள் தான் இச்சமூகத்துக்குத் தேவையானவர்கள் என்று அந்த தந்தைப் பெரியாரே சொல்லுமளவிற்கு வளர்ந்தவன்.- அவனுடைய வாரிசுகளையும் படிக்க வைத்திருப்பானா என்பது சந்தேகமா? நானும் இன்று இருக்கும் இந்த இடத்திலிருந்திருப்பேனா என்பது சந்தேகமே? – என்னுடன் உடன் படித்த, என்னைச் சுற்றியிருந்த பலரை வைத்தே இந்த மதிப்பீட்டை உணர்ந்து சொல்கிறேன் -
எனக்கும், என் பாட்டனுக்கும் சுயமரியாதையை உணரச்செய்தவனின் பாதையில் இன்றும் நடந்துகொண்டிருக்கிறேன். என் பாதை அவரிலிருந்தே துவங்குகிறது.
