Duel- Tom&Jerry

பள்ளிக் காலத்தில் உடண்படித்த ஒரு பெண் எப்போதும் முதல் மதிப்பெண் பெறுவாள், நான் எட்டாம் வகுப்பில் அந்த பள்ளியில் சேர்ந்த போது அவளை மிஞ்சி முதல் மதிப்பெண் பெறவேண்டுமென்று என் ஈகோ (ego) என்னை உந்திக்கொண்டே இருந்தது. நானும் எத்தனை முயண்றபோதும் அவளை நான் தோற்கடித்ததே இல்லை. அப்போதெல்லாம் அவளெனக்கு எதிரியாகவே பட்டாள், ஆனால் இப்போது யோசிக்கும் போது என்னுடைய ஈகோ என்னை உந்தியதைப்போலவே என்னிடம் தோற்கக்கூடாது என்ற அவளது ஈகோ அவளை உந்தியிருக்குமென்று புரிகிறது. எனக்கான ஒரு ஆல்ட்டர் ஈகோ தான் அவள், அவளுக்கான ஆல்ட்டர் ஈகோ தான் நான். அவளிடம் நான் தோற்றபோதெல்லாம் என்னுடைய இயலாமையில் அழுதிருக்கிறேன்.
ஆனால் நான் தோற்கத் தோற்க என்னை வேறுவேறு தளங்களில் என்னை நான் வலுப்படுத்திக் கொண்டேன், என் வாசிப்பு பழக்கத்தை அதிகரித்துக் கொண்டேன், பள்ளியில் நாடகங்களை இயக்கினேன், நடித்தேன். (அது ஒரு கொடுமையான, நானெடுத்த மிக கேவலமான அவதாரம்) அந்த ஈகோ-ஆல்ட்டர் ஈகோ சில சமயங்களில் நம்மை முன்னெடுத்தும் செல்லலாம், இல்லை காலை வாரியும் விடலாம். அப்படி ஈகோ-ஆல்ட்டர் ஈகோ பற்றிய படம் தான் duel. டாம்&ஜெர்ரி எல்லாமே டாமுக்கான ஆல்ட்டர் ஈகோ ஜெர்ரி, ஜெர்ரிக்கான ஆல்ட்டர் ஈகோ தான் டாம்.

தன் காரை எடுத்துக் கொண்டு தன் பணிக்காக தன் பாதையில் செல்கிறான், வழியில் இவனை விட வேகமாகச் செல்லும் வாகனங்களுக்கு வழிவிடுகிறான், மெதுவாகச் செல்லும் வாகனங்களை முந்திச் செல்கிறான். அப்படி ஒரு அழுக்கேறிய ட்ரக் மித வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது, அதை முந்திச் செல்கிறான். சிறிது நேரத்தில் அந்த ட்ரக் அவனது காரை முந்திச்சென்று காருக்கு முன்னால் போய் மெதுவாகச் செல்கிறது. இவன் கடுப்பாகி முந்த முயல்கிறான்,இவன் இடது பக்கம் சென்று முந்த முயலும் போது ட்ரக்கும் இடது பக்கம் செல்கிறது, வலது பக்கம் முயலும் போது மீண்டும் வலது பக்கம் திரும்புகிறது ட்ரக். கடுப்பாகிறான். ட்ரக் ட்ரைவர் நீ போய்க்கொடா மவனே என்று கையைக் காட்ட, ஹப்பா வழிய விட்டானே என்று இடது பக்கம் காரைத் திருப்புகிறான், எதிரே வருகிறாது இன்னொரு வாகணம், கணநேரத்தில் விபரீதத்தை புரிந்து கொண்டு தப்பிக்கிறான். இந்த இடத்தில் தான் அவனுக்கு புரிகிறது, தான் ஆபத்தில் மாட்டிக் கொண்டோமென்று, நமக்கும். அவ்வளவு பெரிய ட்ரக்கை அந்த தம்மாத்துண்டு கார் முந்திச் சென்றதில் ட்ரக் ட்ரைவரின் ஈகோ ஷாம்பெய்ன் பாட்டில் திறந்தைப் போல பொங்கிக் கொள்கிறது. அந்த ஈகோ அந்த காரையும் காரை ஓட்டுபவனையும் அழித்துவிட வேன்டும் என்ற அளவுக்கு செல்கிறது.

அந்த ட்ரக்கை ஒரு வழியாக முந்திச் செல்கிறான், பிறகெடுக்கிறது வேகம் காரும், ட்ரக்கும், திரைக்கதையும் கூட. மீண்டுமொருமுறை அவனைக் கொல்ல ட்ரக் முயல்கிறது. அதிலிருந்து ஒருவழியாகத் தப்பித்து ஒரு மோட்டலை அடைகிறான். அத்தோடு தப்பித்தோம் என்று நினைக்கிறான். ஆனால் அந்த ட்ரக் டிரைவரின் ஈகோ மீண்டும் மீண்டும் அவனைத் கொல்வதிலேயே முயல்கிறது, அவனிடமிருந்து தப்பிக்க இவன் முயல்கிறான். ட்ரக்கிடமிருந்து அவன் தப்பிக்கிறானா? அல்லது எப்படித் தப்பிக்கிறான்? என்பதுதான் படத்தின் முடிவு. இப்படி அந்த ட்ரைவரின் ஈகோவும், அவனது ஆல்ட்டர் ஈகோவும் தான் நம்மை ஒன்றரை மணி நேரமும் அப்படியே கட்டிபோடுகிறது. முதல் காட்சியிலிருந்தே கேமரா நமக்கு ஒரு த்ரில்லருக்கான எஃபெக்ட்டைத் தந்துவிடுகிறது.

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் டி.வி சீரியல் இயக்கி ஸ்டுடியோவை எல்லோருக்கும் சுற்றிக் காட்டும் அல்லக்கை வேலை பார்த்துகொண்டிருந்த போது, ஒரு இதழில் சிறுகதை ஒன்று வெளி வந்திருக்கிறது, அந்தக் கதையைப் படித்தவர்கள் , இது உனக்கான கதை நீ இதை இயக்கலாமே என்ற போது துணிந்து இறங்காமல், திரைக்கதைக்காக அந்தக் கதையை எழுதியவரிடமே போய் உட்கார்ந்து கதையடித்து ஒரு வழியாக திரைக்கதையை எழுதி முடித்துவிட்டு நான்கு கேமரா, ஒரு அழுக்கு பிடித்த ட்ரக், அதற்கு ஒரு ட்ரைவர், ஒரு மனிதன் அவனுக்கு ஒரு கார், ஒரு குழு என்று நீண்ட நெடுஞ்சாலையை தேடிப்பிடித்துப்போய் எழுபது நிமிடங்களில் ஒரு தொலைகாட்சி தொடரை இயக்கினார். அந்தத் தொலைக்காட்சித் தொடரைப் பார்த்தவர்கள் மீண்டும் மீண்டும் கேட்க, தொலைக்காட்சி மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிக் கடுப்பாகிவிட, ஸ்பீல்பெர்க்கை கூப்பிட்டு, “யோவ் இந்தக் கதையை வைத்து ஒரு மெயின்ஸ்ட்ரீம் படமெடுத்துடு” என்று சொல்லிவிட்டார்கள். இன்னொரு நாற்பது நிமிடத்துக்கு திரைக்கதையை உருவாக்கி ஹாலிவுட் திரைத்துறைக்கு வந்தார் ஸ்பீல்பெர்க்.

டாம்&ஜெர்ரியின் பெரும்பாலான எபிசோட்களில் டாமும் ஜெர்ரியும் மோதிக்கொள்வது அவர்களது ஈகோவால் தான். ஜெர்ரியை மக்ரோனியாகவும், பாஸ்தாவாகவும், சிக்கன் லெக்பீஸாகவும் கற்பனை செய்து அதைச் சாப்பிடத்துணிவதே டாமின் வேலை. டாமிற்கு இரையாகமால் தப்பிக்க சில சமயம் முயலுவதுமே ஜெர்ரியின் வேலை. அப்படி முயலும் போது டாமிற்கு ஆப்படிக்கும் வேலையை ஜெர்ரி செய்து டாமின் ஈகோவைத் தூண்டிவிட்டு விடும். மீண்டும் ஜெர்ரியின் துரத்தல், இப்படியே டாமின் ஈகோவும் ஜெர்ரியின் ஆல்ட்டர் ஈகோவும் மோதிக்கொள்வதே, டாம்&ஜெர்ரியின் டெம்ப்ளேட் வகைக் கதைகள், சார்லி சாப்ளினுக்கு பசியைப் போலவே. முக்கியமாக PUSSY GETS THE BOOT(1940)ம், MIDNIGHT SNACK (1941)ம், FRAIDY CAT(1942)ம் டாமின் செயலால் ஜெர்ரியின் ஈகோ தூண்டப்பட, ஜெர்ரியின் புத்திசாலித்தனம் டாமை ஒரு கேனையனாக்கி வீட்டை விட்டே வெளியே துரத்துவது தான் இந்த 3 படங்களிலும் கதை. டாமை வீட்டைவிட்டு துரத்திய பிறகு தனிமையை உணரும் ஜெர்ரி மீண்டும் திட்டம் போட்டு டாமை வீட்டிற்குள்ளும் கொண்டு வந்திருக்கிறது, the lonesome mouse(1943) அதே போல டாம்&ஜெர்ரிக்களின் மொத்தப் படமுமே இந்த வகை ஈகோ மோதல்கள் தான். டாம்&ஜெர்ரி கதைகளை ஏன் யாரும் 3D அனிமேஷனில் எடுப்பதில்லை? இன்னமும் என்னை மாதிரி குழந்தைங்க எல்லாரும் டாம்&ஜெர்ரிக்கு அடிமைதான்.


comments

Speak Your Mind

*

இதுவரை எழுதியது

புள்ளிவிபரம்

  • 124330இதுவரை:

பதிவின் உரிமம்