அரசியலும் பெண்களும்

1952 ஆம் ஆண்டு. முதல் பொது தேர்தலுக்காக, வாக்களர் பட்டியல் தயாரிக்கும் பணி. இந்தியக் கிராமங்களை நோக்கி அரசுப் பணியாளர்கள் சென்று வீடுவீடாக வாக்காளர் பெயர்பட்டியல் தயாரித்தபோது, பல பெண்கள், முருகைய்யாவின் மகள், முருகனின் மனைவி, முத்துசாமியின் அம்மா என்றுதான் தங்கள் பெயரைப் பதிவு செய்தனர். கணக்கெடுத்த அதிகாரிகளும் அன்றைய நிலையில் ஏறக்குறைய இந்த அளவிலேயே இருந்ததால், இம்முறையில் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தனர். இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையாளரான, சுகுமார் சென், மீண்டும் ஒழுங்காக பெயர்களை சேகரித்துவருமாறு ஆணையிட்டார். அப்போதும் உண்மையான பெயர்களைத் தரத் தவறிய பெண்களை வாக்காளர் பட்டியலிலிருந்தே நீக்கிவிடுங்கள், அப்போதாவது அடுத்த தேர்தலுக்குள் இந்த மூடப் பழக்கத்தை விட்டு மக்கள் வெளிவரட்டும் என்று அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். உண்மையிலேயே அதிர்ச்சி வைத்தியம் தான் அது, வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்ற மகத்தான, பேதமற்ற குடியரசு தத்துவத்தை, அமல்படுத்திய நேரத்தில், மூடப்பழக்கத்தை பின்பற்றுபவர்கள் இந்நாட்டின் அரசியலை தீர்மாணிக்கும் சக்தியற்றவர்களாக இருக்கட்டும் என்று அவர் முடிவெடுத்தது, பலருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது, ஆனால், இந்த அதிர்ச்சி வைத்தியம் பலணளித்ததா? கல்வியறிவை ஊட்டாமல், இந்தகைய அதிர்ச்சி வைத்தியங்கள் அளித்தால் பயணளிக்குமா?

2010 ஆம் ஆண்டு. தேசிய மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணிக்காக, தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் (நானே நேரில் கண்ட காட்சி இது), அறுபது வயது மதிக்கத்தக்க மூதாட்டி, இறந்து போன அவர் கணவர் பெயரை நான் என் வாயால சொல்லமாட்டேன், அவர் பேரு, துட்டுக்கு இன்னொரு பேர் சொல்லுவாங்களே அதுதான்என்றார். அந்தக் கிராமத்தில் பல மூதாட்டிகளின் நிலையும் இதுதான். வயதானவர்களின் இந்த அறியாமை இன்றளவும் அப்படியே நீடிக்கிறது, 58 ஆண்டுகளாக சுகுமார் சென் போன்றவர்களின் அதிரடி நடவடிக்கைகள் சிறு முன்னேற்றங்களை மட்டுமே ஏற்படுத்தியிருக்கின்றன, ஒட்டுமொத்த பயன் என்று பார்த்தால், அத்தகைய முன்னேற்றங்களும் புறக்கணிக்கத்தக்கையவே.

இந்தப் பத்தாண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் முடிவில் நாம் இன்னொரு அதிர்ச்சியையும் சந்திக்க வேண்டும், அது நாட்டின் எழுத்தறிவு சதவீதம். எழுத்தறிவு சதவீதத்தைப் பொறுத்த வரையில் நான்கில் ஒரு பங்கினர் இன்னும், எழுத்தறிவற்றவர்களாக இருக்கிறார்கள், அதாவது நாட்டின் எழுத்தறிவு சதவீதம், 75%க்கும் குறைவாகவே உள்ளது, இத்தனைக்கும் எழுத்தறிவு சதவீதம் கணக்கிடும் முறை கேலியானது, தன்னுடைய பெயரை எழுதத் தெரிந்தால் போதும், இந்த நிலையிலேயே 25% பேர் எழுத்தறிவற்றவர்கள் என்றால், இந்நாட்டின் வளர்ச்சி என்பது எது? மொத்த தேசிய உற்பத்தியின்(GDP)  வளர்ச்சி மட்டுமே வளர்ச்சி அல்ல என்பதை புதிய பொருளாதாரக் கொள்கையின் நிர்மாணிகள் என்று உணரப் போகிறார்கள்?

comments

Speak Your Mind

*

இதுவரை எழுதியது

புள்ளிவிபரம்

  • 124304இதுவரை:

பதிவின் உரிமம்