Road To Perdition – நரகத்திலிருந்து விடுபடும் பயணம்

(நான் சொல்ற படத்தை யாருமே பாக்க மாட்டேன்றீங்க என்று கவலைப்படும், கொழந்தைக்கு இந்த பதிவு சமர்ப்பனம். நீங்க சொன்ன அன்னைக்கு ராத்திரியே படம் பாத்துட்டேன் கொழந்த.)

தந்தை மகன் உறவை விட மிகவும் சிக்கலான வேறொரு உறவு இருந்துவிட முடியாது .ஷெல்லிக்கு அவர் தந்தையோடு வெளியே தெரியாத அளவுக்கு மோசமான சிக்கல் இருந்திருக்கிறது. ஹிட்லரும் அவர் தந்தையும் முட்டிக் கொன்டிருந்திருக்கிறார்கள். முன்னவரின் கவிதைகளின் வீரியத்திற்கு அந்த உறவுச்சிக்கல் காரணம், -அதை அவர் அதிக இடங்களில் குறிப்பிடாத போதும்.- பின்னவரின் வெறித்தனத்திற்கு இந்த உறவுச்சிக்கலும் ஒரு காரணமாயிருக்கலாம். சிலருக்கு இந்த உறவு அருமையானதாக அமைந்திருக்கும், சிலருக்கு கொடுமையானதாக அமைந்திருக்கும். இப்படி இந்த தந்தை மகன் உறவை மையமாகக் கொண்ட திரைப்படம் Road To Perdition.

இரண்டு தந்தைகள், தங்கள் மகன்களைக் காப்பாற்ற எடுக்கும் நடவடிக்கைகள் தான் படத்தின் கதை. ஊருக்கே ஒரு பெரிய தாதா, அவருக்கு ஒரு வாரிசு, அப்பாவுக்கு பின்னாடி, அந்த இடத்துக்கு வருவதற்காக, அப்பா இருக்கும் போதிலிருந்தே தகிடுத்தத்தங்கள் செய்ய ஆரம்பிக்கும் தப்பாத வாரிசு, தாதாவுக்கு மகன் போன்ற ஒரு அடியாள், கொஞ்சம் நிதானமானவன், திறமையானவன். அந்த அடியாளுக்கு இரண்டு மகன்கள், ஆதரவற்றவனாக வளர்ந்த போது ஆதரவளித்த பரமபிதாவுக்கு அடியாளாயிருக்கிறோம், அது தன் மகன்களுக்கும் வந்துவிடக்கூடாது என்று சற்றே கண்டிப்பான தந்தையாக இருக்கிறான். தாதாவும் தன் மகனிடம் கடுமையாக இருக்கிறான். ஒரு நாள், தாதாவின் மகனும், மகன் போன்றவனும் ஒருவரை விசாரிக்கச் செல்கிறார்கள், அடியாளின் மகனுக்கு தந்தையின் வேலையின் மீதும், அவனது துப்பாக்கியின் மீதும் துவக்கத்திலிருந்தே ஒரு கண், அதனால், அவர்களுக்குத் தெரியாமல் அவர்களுடனே செல்கிறான். அவர்கள் செய்த கொலையையும் பார்த்துவிடுகிறான். இவன், என் மகன். அதனால், வெளியே சொல்லமாட்டான் என்று சொன்ன போதும், தாதாவும், தாதாவின் மகனும் யோசிக்கிறார்கள். இதனால், தாதாவின் மகன், அடியாளின் முதல் மகனை கொல்வதாக நினைத்து அவனது மனைவியையும், இரண்டாம் மகனையும் கொன்று விடுகிறான்.

எஞ்சியிருக்கும் தன் ஒரு மகனைக் காப்பாற்ற நினைக்கும் நேரத்திலேயே, தன் குடும்பத்தை சிதைத்தவனை கொல்லவும் முடிவெடுக்கிறான். தனக்குத் தெரியாமல், இதைச் செய்த தன் மகனை அடித்துத்துவைக்கும் தாதாவுக்கு மகன் மீது திடீரென பாசம் பொத்துக்கொண்டு வருகிறது, தன் மகனுக்காக, மகன் போன்றவனிடம் சமாதனம் பேச முயன்று தோற்றுப் போகிறான். இங்கிருந்து துவங்குகிறது, இரண்டு தந்தைகளுக்கும், இரண்டு மகன்களையும், தங்களையும் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சி. இறுதியில் வலுத்தவன் வாழ்கிறானா என்பதுதான் முடிவு.

படத்தின் முடிவு எனக்கு பிடிக்காமல் போயிருந்தாலும். படத்தின் பல அம்சங்கள் என்னைக் கவர்ந்தவை, ஒளிப்பதிவு, இசை, எந்த நடிகரும், ஒரு இடத்திலும் மிகை நடிப்பையோ, நாடகத்தனத்தையோ காட்டாமை. ஜூட் லாவினுடைய நடிப்பு மிரட்டலென்றால் (டாமும் ஜூட் லாவும் முதல் முதலில் சந்திக்கும் போது, உண்மையிலேயே டாமுக்கு வேர்த்துக் கொட்டியதாம்.), டாமின் நடிப்பு அடக்கி வாசிக்கப்பட்ட பியானோ இசையைப் போல முழுதும் விரவியிருப்பது, பிரார்த்தனைக் கூட்டத்தில் பால் நியுமன், டாமைப் பார்த்ததும், முகத்தில் காட்டும் உணர்ச்சி, இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

படத்தின் தலைப்பு perdition என்ற நகரத்திக்குச் செல்வதாகப் பட்டாலும், (ஒரே ஒரு முறை படத்தில் சொல்லப்படும்) உண்மையில் perdition என்ற வார்த்தைக்கு பொருள் நரகம். இது ஒரு குறியீடாகவே எனக்குப் படுகிறது. தான் வாழும் நரகத்திற்கான பாதையில் தன் மகன் தெரியாமல் நுழைந்து விட்டாலும், அவனை அதிலிருந்து வெளியேற்றவே துடிக்கிறான். அதற்காகவே ஆறு வார காலக் கடுமையான பயணமும் போகிறான். இறுதியில் உண்மையான பெர்டிஷனுக்குச் சென்றாலும், அவன் மகன் அந்த ஊரிலிருந்து வெளியே வருகிறான். நரகத்திற்குள் அவன் நுழைந்திருந்தாலும் பின்பு வெளியே வந்துவிடுகிறான்.

படத்தின் மூலக்கதை கிராஃபிக் நாவல் வடிவில் ஆலன் காலின்ஸ், ரிச்சர்ட் ரெய்னரால் எழுதப்பட்டது. ஆனால், படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில், நீ கிட்ட வராத ஓடிடு என ஸ்பீல்பெர்க் துரத்திவிட்டிருக்கிறார். போனால், போகிறதென்று தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள ஊறு காயைப்போல ஆலோசனை என்று ஓரமாக உட்கார வைத்திருக்கிறார்கள். மூலக்கதையில் ஜூட் லாவின் கதாபாத்திரம் கிடையாதாம். கதை விவாதம் என உட்கார்ந்து உண்மையாக அரட்டையடித்துக்கொண்டிருந்த போது, உருவாக்கிய பாத்திரம் தான் ஜூட் லாவினுடையது. காட்டுத்தனமான முடிவுக்காகவே ஜூட் லாவின் கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

கதை நடப்பது, 1930களில், அமெரிக்காவில் பொருளாதார பெருமந்தம் (Great Depression) நிலவிய காலம், அல் கப்போன் ஆதிக்கம் நிலவிய காலம்.  (ஹாலிவுட்டுக்கு, அதிகமாக குண்டர் கதைகளை வழங்கிய வள்ளல். the untouchables- robert de niro.) அந்தப் பெருமந்த கால உடைகளுக்காக, சிரமப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும், அந்த மந்த காலத்திலும், தாதாக்கள் பகட்டாக உடை அணிந்ததால், எடுத்து எல்லாருக்கும் மாட்டியிருக்கிறார்கள். பல இடங்களில் 1930யைக் கொண்டு வருவதில் சொதப்பியிருக்கிறார்களாம், ஐஎம்டிபியில் அவனவன் கழுவி ஊத்தியிருக்கான்.

ஹரி படமென்றால், அருவாளும், சுமோவும் திரையை அடைத்துக் கொள்வதைப் போல, அல் கப்போனின் பெயரை இழுத்துவிட்டாலே கட்டாயமாக, திரை முழுவதையும் ரத்தத்தால் அலங்கரிக்கும் பழக்கம் இருந்து வந்த போதிலும். இந்த படத்தில் அந்த வெறியாட்டங்கள் இல்லாததற்கு காரணம், கொஞ்சம் வண்முறையை கொறைச்சுக்கலாமே என்ற டாம் ஹாங்ஸின் ஒற்றை வார்த்தைதானாம். அதேபோல அல் கப்போன் வரும்படி எடுத்த காட்சிகளையும் வெட்டித்தள்ளியிருக்கிறார்கள்.

சாம் மென்டிஸ், டாம் ஹேங்ஸ், பால் நியூமன், ஜூட் லா என்று எக்கச்சக்க கூட்டம் இந்த படத்துக்காக உழைத்தாலும், ஒட்டுமொத்தமாக இந்த படத்தைத் தூக்கி நிறுத்தியவர் கான்ரட் ஹால். தன்னுடைய ஒளிப்பதிவால், படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்தவர் இவர்தான். படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஹமாம் போட்டு தூய்மையாக சுத்தம் செய்ததைப் போல இருப்பதைப் பார்க்கும் போது, ஃப்ரேம்களை அமைத்துவிட்டு உள்ள வந்து எல்லாம் நடிச்சிட்டு போங்கன்னு சொல்லியிருப்பாரோன்னு தோனுது. இந்தக் காட்சிய இத விட சிறப்பா வேற எடுக்க முடியாதுன்னு சொல்ற மாதிரியான காட்சியமைப்புகள். காட்சிகளின் ஒளியமைப்புக்காக, எட்வர்ட் ஹூப்பரின் ஓவியங்களைக் கொண்டு அமைத்திருந்தார்களாம். சிக்காகோவுக்குள் நுழைந்த பிறகு மனித தலைகளுக்கு நடுவே தந்தையும் மகனும் நடந்து வரும் காட்சி. ஜீட் லா அறிமுகமாகும் காட்சி, முதல் முறையாக டாமும், லாவும் சந்திக்கும் உணவக காட்சி, பால் நியுமனை, காத்திருந்து சுடும் காட்சி, டேனியலை கொன்ற பிறகு கண்ணாடியில் அவன் சவத்தைக் காட்டும் இடம், ஜூட் லா சன்னல் வழியே துப்பாக்கியை நீட்டிக்கொண்டிருக்கும் காட்சி, இறுதியாக டாமைச் சுட்ட பிறகு பொறுமையாக ஜூட் லா தன்னுடைய கேமராவை சரி செய்யும் காட்சி, இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இதையெல்லாம் பார்த்து ரசிக்கத் தான் உண்மையிலேயே கண் கோடி வேண்டும்.

ஒவ்வொரு காட்சியிலும் இப்படி முழுமையை எதிர்பார்த்து பணி புரிந்ததால் தான், கான்ரட் ஹால் பத்து திறமையான, செல்வாக்கான ஒளிப்பதிவர்களில் ஒருவராகத் திகழ்கிறார். இதுதான் அவர் பணி புரிந்த கடைசி படம். இந்த படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான அக்காடமி விருது அவரது மறைவுக்குப் பின் வந்து சேர்ந்தது.

படத்தின் இறுதி சில நிமிடங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், அருமையான படம். காட்சியிண்பத்துக்காக இரன்டாம் முறை கூடப் பார்க்கலாம்.

comments

Speak Your Mind

*

இதுவரை எழுதியது

புள்ளிவிபரம்

  • 124401இதுவரை:

பதிவின் உரிமம்