என் தலை… அஞ்சல் தலை!

அஞ்சல் தலைகளைச் சேமிப்பது  சுவாரஸ்யமான கலை. ஒரு நாட்டின் தலைவர்கள், கலாசாரம், பழக்க வழக்கங்கள், வரலாறு போன்றவற்றை அறியவும் தூண்டுகோலாக விளங்குகிறது.

நமது நாட்டின் அஞ்சல்தலைகளை யோசித்துப்பாருங்கள், காந்தி, நேதாஜி, நேரு, இந்திரா காந்தி, அண்ணா என நீண்டு செல்லும் அந்தப் பட்டியலில் உங்கள் படமும் இடம்பெற்றால் எப்படி இருக்கும்?

‘மிகப் பெரிய சாதனைகள் செய்தவர்களும் தலைவர்களும் மட்டுமே இடம்பெற்ற அஞ்சல்தலையில் இனி,  நமது  படமும் அச்சிடப்படும். அதை நமது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி மகிழலாம்.

உங்களுடைய படம் மட்டுமல்லாது; நீங்கள் வரைந்த ஓவியங்கள், எடுத்த படங்கள் போன்றவற்றையும் தபால்தலையாக அச்சிட்டு வாங்கிக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் பெயர், ‘என் அஞ்சல்தலை’.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, சென்னையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்துக்கு நேரில் சென்று, உங்களுடைய அடையாள அட்டை ஒன்றைக் காண்பித்து, இதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, நீங்கள் அச்சிட விரும்பும் புகைப்படத்தை அளிக்க வேண்டும். 12 அஞ்சல்தலைகளைக் கொண்ட ஒரு முழுத்தாளுக்கான கட்டணம் 300. விண்ணப்பம் மற்றும் அதற்கான கட்டணம், தேவையான ஆவணங்கள் போன்றவற்றை முழுமையாகச் செலுத்திய பிறகு, 15 நாட்களுக்குள் உங்கள் முகவரிக்கு அஞ்சல் தலைகளை அனுப்பிவைப்பார்கள்.

இந்தத் திட்டத்தை முதற்கட்டமாக பெருநகரங்களான புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் பெங்களூரு, ஜம்மு, புனே, கோழிக்கோடு, அஹமதாபாத் ஆகிய இடங்களில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இது படிப்படியாக மற்ற ஊர்களிலும் செயல்படுத்தப்படும் என இந்திய அஞ்சல் துறை அறிவித்து இருக்கிறது. மே 3-ம் தேதி சென்னையில் இந்தத் திட்டம் அறிமுகமானது.

அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், நெதர்லாந்து, போலந்து போன்ற பல நாடுகளில் பல ஆண்டுகளாகவே இந்தத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது.

நமது படம் அச்சிடப்பட்ட அஞ்சல் தலைகளால் என்ன பயன்?

இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகத்தில் தனிநபர் கடிதப் போக்கு வரத்துகள் குறைந்துவிட்டன. இந்தத் திட்டம் கடிதப் போக்குவரத்துகளை ஊக்குவிக்கும். உங்கள் உறவினருக்கோ, நண்பருக்கோ அனுப்பும் கடிதத்தில் உங்கள் படம் அச்சிடப்பட்ட அஞ்சல்தலை ஒட்டப் பட்டு இருந்தால், அதைப் பார்ப்பவர்களுக்கு எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும்?

நீங்கள் அஞ்சல்தலை சேகரிக்கும் பழக்கம்கொண்டவராக இருந்தால், உங்களுடைய ஆல்பத்தில் உங்கள் முகம்கொண்ட அஞ்சல்தலையும் இருக்கும். உங்கள் நண்பர்களின் சேமிப்பிலும் இடம்பெறலாம்.

ஃபேமிலி ட்ரீ எனப்படும் குடும்ப வரைபடம் தயாரிக்கும்போது, உங்கள் குடும்பத்தில் உள்ள அத்தனை உறுப்பினர்களின் படங்களும் அச்சிடப்பட்ட அஞ்சல்தலைகளை அதில் ஒட்டி அசத்தலாம்.

(சுட்டி விகடன் 31-05-2013)

Comments

  1. says

    வணக்கம்…

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி…

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_9.html) சென்று பார்க்கவும்… நன்றி…

Leave a Reply