அலைபேசி வழியாக கடவுளின் தூதர்கள்

என்னுடைய தொடக்கப் பள்ளிக்காலம். வீட்டிற்கு சில சமயங்களில், தபாலில் அஞ்சல் அட்டை வரும், சில சமயங்களில், மஞ்சள் வண்ணத்தில், சிகப்பு வண்ணத்தில், வெளிர் நீல நிறத்தில், அச்சிடப்பட்டதாகவும் வரும், அதில் இருந்த செய்திகளின் சாராம்சம் இதுதான், “________ என்ற ஊரில் முக்கூட்டில் முண்டமாய் உட்கர்ந்திருக்கும் முண்டக்காளியம்மனின் சக்தி அபரிமிதமானது. நம்பினார் கெடுவதில்லை. நம்புங்கள். இந்த செய்தியை 108 பேருக்கு இதே போல அஞ்சலில் எழுதி அணுப்புங்கள். உங்களுக்கு ஏழு நாளில் நல்லது நடக்கும். நானே இதற்கு சாட்சி. இதை அலட்சியப்படுத்தினால் விபரீதம் நடக்கும். _______ இந்த ஊரில் இன்னும் ஒருவர் கை வராமல் காலால் உணவு உண்டு கொண்டிருக்கிறார். உங்களுக்கு வசதியிருந்தால், இதை அச்சிட்டு 250பேருக்கு அணுப்புங்கள் இப்படியும் மதப்பிரச்சாரங்கள் நடந்தது. இந்தச் செயலுக்குப் பின்னால் இருப்பவர்கள், பெரும்பாலும் அந்தக் கோவில்களின் மணியாட்டிகளாகத் தான் இருப்பார்கள், அல்லது நசிந்து போன அச்சுக்கூட முதலாளியாக இருப்பார்கள், அல்லது வாங்கி வைத்த அஞ்சல் அட்டைகள் வீணாய்ப் போகக் கூடாது என்பதற்காக கடைக்காரர் கிளப்பிவிட்ட பூதமாக இருக்கும். இதற்கு பயந்து கொண்டு, 108 அஞ்சல் அட்டைகளை கை வலிக்க வலிக்க எழுதி அணுப்பிவிட்டு கை வலிக்காக மருத்துவரிடம் போனவர்களை நான் அறிவேன். பாவம் அந்த முண்டக்காளியம்மன், அவர்கள் கை வலியைக் கூடத் தீர்க்கவில்லை. இது ஒரு 12 ஆண்டுகளுக்கு முன்பு.

சமீபத்தில், இந்தக் கூட்டம் வளர்ச்சியடைந்திருக்கிறது, இப்போதெல்லாம், அஞ்சல் அட்டைகள் இல்லை, அலைபேசியின் குறுஞ்செய்திகளின் வழியாகவும், இணையம் வழியாகவும் கிளம்பிவிட்டார்கள்.

இன்று குருவுக்கு உகந்தநாள் அவரை வழிபடுங்கள், நல்லது நடக்கும், இந்தச் செய்தியை அழித்தால்(delete) தீமை நடக்கும்.” இது நேற்று காலை எனக்கு வந்த செய்தி.(வெள்ளிக்கிழமை) குருவுக்கு உகந்த நாள் வியாழன் தானே? இந்தச் செய்தியை அணுப்புபவர்களுக்கு இதில் கூடவா ஒரு நேர்மை இருக்காது?

இதை விடக் கொடுமை, இன்று திருமால் ஜட்டி போட்ட நால், சிவன் குட்டி போட்ட நாள், இந்த செய்தியை 18 பேருக்கு அணுப்புங்கள், ஒரு மணிநேரத்திற்குள் அணுப்புங்கள், 24 மணிநேரத்தில் நல்லது நடக்கும், இதை அழித்தால், தீமை நடக்கும். நல்ல வளர்ச்சி. அஞ்சல் அட்டைக் காலத்தில் ஒரு வாரத்திற்குள் நன்மை நடக்கும் என்றார்கள், இப்போது அலைபேசிக் காலத்தில் ஒரே நாளில் நல்லது நடக்கும் என்கிறார்கள். கடவுளும் கூட தன்னை வேகப்படுத்திக் கொண்டார் போலும்.

ஓம் க்ரீம் ஓம், பூம் க்ரீம் பூம்இது சக்தி வாய்ந்த மந்திரம். இதை 21 பேருக்கு அணுப்புங்கள், என்னையும் சேர்த்து, நீங்கள் விருப்பப்பட்டவரிடம் இருந்து நல்ல செய்தி வந்து சேரும், அப்படி அணுப்பாவிட்டால், ஒரு வருடத்திற்கு உங்களுக்குத் தீமை நடக்கும். இந்தச் செய்தியை எனக்கு அணுப்பியவன், ஒரு கிறித்துவன். ஆஹா, ஒரு கிறித்துவனை ஆண்டவன் ஆட்கொண்டுவிட்டார், என்று கூத்தாடுவது வேடிக்கையானது. முட்டாளுக்கு மதமேது கடவுளேது, பயமும் ஆசையுமே பிரதானம். இதில் நீங்கள் விருப்பப்பட்டவரிடம் இருந்து நல்ல செய்தி என்பதில்தான், எல்லோரும் விழுகிறார்கள். அதிலும் ஒரு வருடத்திற்கு தீமை என்பது இன்னும் அச்சுறுத்துகிறது. அதுதான் கொக்கியே. முன்னாளில் பயத்தால் வளர்ந்த மதம், பின்னால் வாளால் வளர்ந்த மதம், இப்போது பயத்தால் வளர்க்கப் படுகிறது.

இயேசு நாளை வருவார், நாளை விடிந்ததும் வருவார், இருட்டுவதற்குள் வந்துவிடுவார், உங்கள் பாவங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார், என்று பயமுறுத்தும் மதப் பிரச்சாரத்திற்கும், இத்தகைய நவீன பயமுறுத்தும் மதப்பிரச்சாரத்திற்கும் வேறுபாடு எதுவும் இல்லை.

வளரும் தொழில்நுட்பத்தையும், பயண்படுத்தி பின்னால் இழுத்துப் போகும் இந்த சக்திகள் ஒழிக்கப்படவேண்டியவை.

comments

Comments

  1. Kani says:

    >>>>>>> முட்டாளுக்கு மதமேது கடவுளேது, பயமும் ஆசையுமே பிரதானம்.

    >>>>>>> முன்னாளில் பயத்தால் வளர்ந்த மதம், பின்னால் வாளால் வளர்ந்த மதம், இப்போது பயத்தால் வளர்க்கப் படுகிறது.

    - Clarity and thought and expression… Something very rare to find these days… Semmma!!

Trackbacks

  1. [...] This post was mentioned on Twitter by சங்கமம், தமிழினியன். தமிழினியன் said: அலைபேசி வழியாக கடவுளின் தூதர்கள் http://bit.ly/cf7sKG [...]

Speak Your Mind

*

இதுவரை எழுதியது

புள்ளிவிபரம்

  • 124401இதுவரை:

பதிவின் உரிமம்