மதுக்கோப்பையை கையில் ஏந்திக் கொண்டு மதுவிலக்குப் பிரச்சாரம் செய்யக்கூடாதுதான். ஆனால், மோடி மதநல்லிணக்கத்துக்காக உண்ணாவிரதம் இருந்ததானது என்னை உற்சாகப் படுத்தி இதை எழுத தூண்டிவிட்டது. மோடிக்கு நன்றி. நிற்க.
அய்ன்ச்டைன்(Albert Einstein), இந்தப் பெயரைக் கேட்டாலே தலை தெறிக்க ஓடுமளவுக்கு மூன்றாண்டுகள் கல்லூரிக்காலத்தில் ஒரு விரிவுரையாளர் இயற்பியலை சாறாய்ப் பிழிந்து எங்களை எல்லாம் திகைக்க வைத்தார். ஆனால், இயற்பியலை ஒரு பாடமாய் எடுத்துப் படிப்பதற்கு முன்னரே, களைந்து நட்டுக்கொண்டு நிற்கும் தலைமுடியும், ஆழமான பார்வை கொண்ட கண்களுமாய் ஒரு விஞ்ஞானி இப்படித்தான் இருப்பார் என்ற பிம்பத்தை மனதில் பதியச் செய்தவர் இவர்.
கடவுள், பிரபஞ்சம் பற்றிய இவர் கருத்துகளை திரித்தும், கேலியாக்கியும் எழுதப்பட்ட எதிர் கட்டுரைகளே இவரை நோக்கி என்னை நெருக்கித்தள்ளியது. இப்படி என்னை எழுத வைத்தது. பிறகு, சோசியலிசம் ஏன்? என்ற கட்டுரையால், இவர் பக்கமாக சாய்ந்து, தேடி தேடிப் படிக்கத் துவங்கினேன். அப்படி சமீபத்தில் கிடைத்த தமிழ் புத்தகம், “அய்ன்ச்டைன் கட்டுரைகள்“ பாரதி புத்தகாலயத்தின் சார்பாக “books for children” வெளியிட்டது. அவருடைய பல கட்டுரைகளை, ஆறு பிரிவுகளாகப் பிரித்து அருமையான புத்தகமாய் கொன்டு வந்திருக்கிறார்கள்.
குழந்தைகளுக்கு புரியக் கூடிய தரத்தினுடைய கட்டுரைகள் இவருடையதா? என்பது முதல் கேள்வி. அடுத்தது, இந்தப் புத்தகத்தைப் படிப்பதின் மூலம் குழந்தைகளுக்கு என்ன நன்மை வந்து சேரும்? இந்தக் கேள்விக்கு என் பதில் நன்மையை விட, தீமைதான் அதிகம் வந்து சேரும். புத்தகத்தின் அறிமுக உரையின் இரண்டாம் வரியின் இரண்டாம் வார்த்தையில் துவங்கும் எழுத்துப் பிழைகள், இறுதி வரை கூடவே தொடர்கிறது. னகர/ணகர வேறுபாட்டில் அதிக பிழைகளைச் செய்து கொண்டிருந்த நான், அதிகமான வாசிப்பின் காரணமாகவும், சில தனிப்பட்ட பயிற்சிகளாலுமே இந்தப் பிழைகளைக் களைந்து கொண்டிருக்கிறேன். தமிழில் பிழையில்லாமல் என்னால் எழுத முடியவில்லை என்ற குறைக்காகவே நான் அதிகமாக வெட்கப்படுகிறேன். தனி ஒரு மனிதனாக நானே எழுத்துப்பிழைகளைக் களைய முயற்சி எடுக்கும் போது, தமிழ் புத்தகங்களை பதிப்பிக்கும் பாரதி புத்தகாலயம், இதிலெல்லாம் கவனம் செலுத்த வேண்டாமா?
இதேபோல இவர்களுடைய இன்னும் சில தமிழ் புத்தகங்களையும் எழுத்துப் பிழைகளைச் சகித்துக்கொண்டு படித்துக் கடாசியிருக்கிறேன். இந்தப் புத்தகத்தைப் படிக்க முடியாமல் தூக்கியெறியாது வைத்திருக்கிறேன். இதனாலேயே மதுக் கோப்பையை கையில் ஏந்தி மதுவிலக்குப் பிரச்சாரம் செய்யத் தயங்கினேன். (நான் ஒன்றும் உத்தமன் இல்லை, என்னுடைய பல பழைய பதிவுகளிலும் தமிழ் பல்லிளித்துக்கொண்டும், எழுத்துப் பிழைகள் மிகுந்தும் தான் இருக்கும்.) ஆனால், இவர்களின் ‘மது’ரத் தமிழோசை தாங்க முடியவில்லை.
இந்த எழுத்துப் பிழைகளோடே இந்தப் புத்தகத்தைப் படிக்கும் குழந்தைகள், இந்த பிழைகளோடே வளரக் கூடிய வாய்ப்புகள் அதிகம், ஏட்டுக்கல்வியைத் தாண்டி வெளிஉலகை நாடும் போது, இவர்கள் விழிப்போடு இருக்க வேண்டியது அவசியமில்லையா? இவர்கள் செய்யும் இந்தப் பிழை ஒரு புத்தகத்தில் மட்டும் ஏற்படுத்தும் பிழை இல்லை, தமிழ் பேசும் அடுத்த தலைமுறையையும் சிதைக்கிறார்கள். மொழியைச் சிதைப்பதையும் கூடுதலாக செய்கிறார்கள். “books for children” என்று போடாமல் இருந்தாலாவது இதையெல்லாம் அழுது தொலைக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
இந்தக் குற்றச்சாட்டு பாரதி புத்தகாலயத்துக்கானது மட்டுமல்ல, தமிழை இன்று வாழ வைத்துக் கொண்டிருக்கும் பல பதிப்பகங்களின் நிலையும் இதுதான். ஒன்றிரண்டு பிழைகளைப் பொறுத்துக்கொள்ளலாம். இப்படிப் பிழை கிடங்காக பெருகிக் கிடக்கும் இவர்களை என்ன செய்வது. கீழுள்ள பத்தி உயிர்மை பதிப்பகத்தைப் பற்றி ரவி எழுதியது
“கிருசுணன் ரஞ்சனா எழுதிய “இப்போது அவை இங்கு வருவது இல்லை” படிக்க முயன்றேன். ஒவ்வொரு பத்தியிலும், எண்ணற்ற இலக்கணப் பிழைகள் மலிந்துள்ளதால் படிக்கப் படிக்கத் தலைவலியும் எரிச்சலுமே மிஞ்சின. முக்கியமான ஒருமை-பன்மை வேறுபாடுகள், சந்தி இலக்கணத்தைக் குழி தோண்டிப் புதைப்பது போலவே பலரும் செயல்படுகின்றனர். அச்சில் உள்ளது எல்லாம் சரி என்று நினைக்கும் மனப்பாங்கு உள்ளதால், வருங்காலத்தில் தமிழ் இலக்கணத்தைச் சிதைப்பதில், மறக்கடிப்பதில் போய் தான் முடியும். எழுத்தாளருக்கு எழுதத் தெரியாவிட்டாலும், பதிப்பகத்தின் தொகுப்பாசிரியர் என்ன செய்கிறார்? உயிர்மை பதிப்பகம் என்பதற்குப் பதில் தயிர்மை பதிப்பகம் எனச் சொல்லலாம்.”
மெய்ப்புத் திருத்துபவர் என்ற ஒரு நபரை இவர்களெல்லாம் கொண்டிருக்க மாட்டார்களா? புலவர் கி த பச்சையப்பனுடன் ஒரு இதழ் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போதுதான், மெய்ப்புத் திருத்துபவரின் பணியை உணர்ந்தேன். ஒரு சிறு தவறையும் தாங்கிக்கொள்ள முடியாத இவரைப் போன்ற தமிழறிஞர்கள் இருக்குமிடத்திலேயே இத்தகைய தமிழ் கொலைஞர்களும் உலா வருவது வேதனையான ஒன்று.
